Saturday, 4 July 2015

உலக சினிமா - Definitely maybe நிச்சயமாக இருக்கலாம்

உலக சினிமா
நிச்சயமாக, இருக்கலாம் - Definitely Maybe



வாழ்க்கையில் எந்த முடிவையும் நிச்சயமாக எடுக்க முடிவதில்லை. எதிலும் சந்தேகம் தொக்கி நிற்கிறது.தாயின் அன்பும் மனைவியின் காதலும் சந்தேகத்திற்கு ஆளாகிவிட்ட காலம் இது.நிச்சயமாக அறிந்த உண்மைகளையும் குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியவில்லை.இதன் விளைவுகளை இப்படம் விளக்க முயற்சி்க்கிறது.இது சற்று சிக்கலான பிரச்சினைதான். உளவியல் ரீதியானது.முடிச்சு மேல் முடிச்சு போட்டு மனத்தையும் அதன் ரகசியங்களையும் இறுகி மூடி வைக்கும் மனிதர்கள், ஒரு கட்டத்தில் தங்களைத் தாங்களே அப்பட்டமாக தரிசிக்கும் தருணங்களும் வாய்க்கின்றன.அவை உன்னதமானவையாகவும் இருக்கலாம், வலி தருவதாகவும் இருக்கலாம்.
இப்படத்தின் நாயகன் வில் ஹேஸ்.வயது 30 .மனைவியிடம் விவாகரத்து பெற்றவன். தனது பத்து வயது மகளுக்கு அவள் அம்மாவை சந்தித்த கதையை கூறுகிறான். 3 பெண்களுடன் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவத்தில் அந்த குழந்தையின் அம்மா எந்தப் பெண் என சஸ்பென்ஸ் வைத்து திரைக்கதை நகர்கிறது.தனது தாய் யார் என அந்தக் குழந்தை கொண்ட ஆர்வம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. இதை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஒரு பள்ளிக்கூடம்.பாலியல் கல்வியை பள்ளிகளில் போதிக்கலாமா கூடாதா என விவாதங்கள் வலுவடைந்துள்ள நிலையில் அந்தப் பள்ளியில் பாலியல் கல்வி போதிக்கப்படுகிறது. இதனால் எட்டு வயது முதல் பத்துவயதுக்குட்பட்ட குழந்தைகள் எல்லாம் உடல் உறுப்புகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.உடல் உறவு, விந்து வெளியேறுதல், போன்ற பிரச்சினைகளை அந்தக் குழந்தைகள் வெட்கமே இன்றி விவாதிக்கின்றன. ஆசன உடல் உறவு என்பது குறித்தும் பேச்சு வருகிறது. நாயகன் வில் ஹேஸின் மகள் 10 வயது சிறுமி மாயா அந்தப் பள்ளியில் படிக்கிறாள். இயல்பாக அவளுக்கும் சிறுவயதிலேயே பாலியல் தொடர்பான விழிப்புணர்வும் வெட்கமின்றி விவாதிக்கும் மனமும் வாய்த்து விடுகிறது.தன் பள்ளியில் படித்ததை தந்தை முன்பு கூச்சமின்றி அந்த சிறுமி சத்தமாக  பொது இடத்தில் படித்துக்காட்டுகிறாள்.ஆண்குறி(penis)குறித்து அவள் படிக்கிற போது அந்தப்பக்கம் நடந்துப் போகிறவர்கள் அதிர்ச்சியுடன் அந்தக்குழந்தையை திரும்பிப் பார்க்கிறார்கள்.
" எனக்கு இப்போது காதல், கலவி பற்றியெல்லாம் தெரியும். நீ இத்தனை நாளாக நான் சிறுபிள்ளை என எண்ணிக் கூறாத உன் காதல் கதையை ஒரு கணம் கூட மறைக்காமல் கூறு.என் அம்மாவை சந்தித்த முதல் நாளிலிருந்தே கூறு ,நான் எப்படி பிறந்தேன். என் தாயை ஏன் விவாகரத்து செய்தாய்? என் தாய் யார்?" என அந்தச் சிறுமி அடுக்கடுக்காக தந்தையிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறாள்.
ஏப்ரல், சம்மர், மிச்சேல் ஆகிய மூன்று பெண்களை தான் காதலித்த கதையை கூறுகிறான் தந்தை.
அமெரிக்க அதிபராகப் போட்டியிடும் பில் கிளிண்டனுக்குப் பணிபுரிய வேண்டும் என்ற காதலி மிச்சேலின் ஆசையை நிறைவேற்ற நியுயார்க் செல்கிறான் வில். முதலில் எடுபிடி வேலைகள் செய்யப் பணிக்கப்படுகிறான். பில் கிளிண்டனுக்கு தேர்தல் குறித்த ஆலோசனைகள் வழங்கி படிப்படியாக அவன் தேர்தல் ஆலோசகராக பதவி பெறுகிறான். ஒரு புத்தகக் கடைக்கு அடிக்கடி செல்லும் போது அங்கு பணிபுரியும் ஏப்ரல் என்ற அழகான பெண்ணுடன் நட்பு ஏற்படுகிறது.ஏப்ரல் அருமையான சிநேகிதியாக மாறுகிறாள். இருவரும் மழையை ரசிக்கிறார்கள். புகை பிடிக்கிறார்கள். ஜேன் ஆஸ்டினின் நாவல்கள் பற்றி பேசி மகிழ்கிறார்கள்.
ஏப்ரலின் தந்தை சில வரிகளை எழுதி பரிசளித்த ஜேன் ஆஸ்டினின் நாவலை பொக்கிஷம் போல் ஏப்ரல் பாதுகாக்கிறாள். ஆனால் அந்தப் புத்தகம்  தந்தையின் மறைவுக்குப் பிறகு எப்படியோ தொலைந்துவிடுகிறது. பல மாதங்களாக அதைத் தேடி வருவதாக கூறுகிறாள் ஏப்ரல்.அந்தப் பிரதியை என்றைக்காவது கண்டுபிடித்து விட முடியும் என்ற நம்பிக்கையில்தான் பழைய புத்தகக் கடையில் வேலைக்குச் சேர்ந்ததாக கூறுகிறாள் ஏப்ரல்.அந்தப் புத்தகம் "நிச்சயமாக உனக்கு அந்தப் புத்தகம் கிடைக்கும் என்று நீ நம்புகிறாயா" என்று கேட்கிறான் வில். may be என்பது அவள் பதில்( படத்தின் தலைப்பு)
வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. எல்லாமே மே பி தான். சந்தர்ப்பம் எப்படி என்பதைப் பொருத்துதான். எந்த கணம் என்ன நிகழும் என்ற மர்ம முடிச்சு அவிழ்ந்துவிட்டால் வாழ்க்கையின் சுவையே போய்விடும். கடந்த காலத்தை நாம் பின்னோக்கி பல ஆண்டுகளாக அசை போட முடியும் மிக அருகில் இருக்கும் அடுத்த நொடியை நம்மால் சரியாக கணித்துவிட முடியுமா? சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் அந்த கணத்தை அறிந்திருந்தால் எத்தனை உயிர்கள் பிழைத்திருக்கும்?
ஏப்ரலும் வில்லும் பேசும் ஒரு காட்சியில் வைர மோதிரம் வாங்கி வரும் வில் தனது காதலி மிச்சேலுக்கு அளித்து தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி கேட்கப்போவதாக கூறுகிறான். இப்ப நீ தான் மிச்சேல் நான் வில் , வா நாம் ஒரு ஒத்திகை பார்க்கலாம் எனத் தன் தோழியை அவன் அழைக்கிறான்.
அவள் மிச்சேலாக, அவன் வில்லாகவே தனது திருமண ஆசையை வெளிப்படுத்த நாடகம் என்பதை மறந்து நிஜமாகவே அவர்கள் அந்தப் பாத்திரங்களாகவே மாறிப்போகின்றன. அவர்கள் அறியாத அடுத்த கணம் அவர்களை நட்பிலிருந்து காதலுக்கு தள்ளி விடுகிறது.
இத்தகைய சூழலி்ல் உண்மையான மிச்சேல் நியுயார்க் வந்துவிடுகிறாள். அவளை சந்தித்து வில் பேசுகிறான். " என் அப்பா அம்மாவை சந்திக்கும் போது காதலுடன்தான் இருந்தார். ஆனால் மணமுடிக்கும் போது அந்தக் காதல் இல்லை. அவர் மனத்தில் வேறு பெண் இடம் பிடித்துவிட்டாள். எனவே திருமணத்திற்கு ஒப்புக் கொள்வதா இல்லையா என முடிவெடுக்க முடியாமல் அவர் தவித்தார்.கடைசியில் குடும்பத்தின் விருப்பத்திற்காக அந்தப் பெண்ணுக்குத் தர வேண்டிய  திருமண மோதிரத்தை கடைசியில் என் தாயிடம் கொடுத்து விட்டார். இப்போது நானும் உன்னை திருமணம் செய்யும் படி கேட்டு இந்த மோதிரத்தை உனக்கு அளிக்கிறேன் " என்று வில் மிச்சேலிடம் மோதிரத்தை கொடுக்கிறான்.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்த மோதிரத்தை ஏற்க மிச்சேல் மறுத்துவிடுகிறாள். அவள் ஒரு ரகசியத்தைப் போட்டு உடைக்கிறாள். "நானும் வேறொரு ஆணுடன் உடல் உறவு கொண்டு விட்டேன்." என்று கூறி திருமண அழைப்பை நிராகரித்து விடுகிறாள்.
ஆனால் மிச்சேல் வந்துவிட்டதால் ஏப்ரலும் சுற்றுலா சென்று விடுகிறாள்.சுற்றுலாவிலிருந்து திரும்பி வரும் போது அவள் புதிதாக ஒரு பாய்பிரண்டுடன் வந்துவிடுகிறாள்.
அப்போதுதான் சம்மர் என்ற பெண் மீது வில்லின் கவனம் திரும்புகிறது. சம்மருக்காக திருமண மோதிரம் வாங்க அவன் ஏப்ரலை அழைக்கும் போது உன் புதிய காதலியை ஏன் எனக்கு அறிமுகம் செய்யவில்லை என அவள் கோபிக்கிறாள்.
மிச்சேல், ஏப்ரல் ஆகியோர் விலகிச்சென்றதையடுத்து சம்மரையே திருமணம் செய்துக் கொள்ள எண்ணும் வில்லின் மனத்தை உடைத்தெறிந்து, அவன் காதலையும் நிராகரித்து,சம்மர் அவன் வாழ்விலிருந்து வெளியேறுகிறாள்.
இப்போது வில்லின் மகள் தந்தையிடம் ஒரு கேள்வி கேட்கிறாள். " நீயோ மூன்று பெண்களையும் தனித்தனியாக உண்மையாக காதலித்தாய். யாருமே உன் காதலை மதிக்கவில்லை, உன்னை ஏமாற்றி விட்டார்கள்.தங்கள் சுயநலத்திற்காக உன்னைப் பயன்படுத்திக் கொண்டார்கள் இல்லையா?"
மனம் உடைந்த விரக்தி நிலையில் மீண்டும் சம்மரை சந்திக்கிறான் வில்,அப்போது சம்மரும் மிச்சேலும் பால்ய கால தோழிகள் என்றும் இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் என்றும் வில் அறிகிறான். இன்னொருவனுடன் உடல் உறவு கொண்டதாக மிச்சேல் கூறியது பொய் என்றும் அவளுடைய ஓரினச் சேர்க்கை தோழி சம்மர்தான் என்றும் அவன் தெரிந்துக் கொள்கிறேன். தன்னால்தான் மிச்சேலும் வில்லும் பிரிந்தனர் என்ற குற்ற உணர்வைப் போக்க மிச்சேலை சந்தித்துப் பேசும் சம்மர் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சிக்கிறாள்.
மிச்சேலும் வில்லும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். ஆகா என் தாய் மிச்சேல்தானே என்று துள்ளி குதிக்கிறாள் சிறுமி மாயா.ஆனால் வில் புதிர் போடுகிறான்.நான் பெயர்களை மாற்றியல்லவா கதையை சொன்னேன் என்கிறான்.
rewind the scene என்கிறாள் மகள்.
மிச்சேலை திருமணம் செய்ய வில் கேட்கும் காட்சி.அப்போது மிச்சேல் தனது காதருகில் உள்ள தலைமுடியை ஒற்றை விரலால் கோதிவிடுகிறாள்.
இதே பழக்கம் தனக்கும் இருப்பதாக கூறும் சிறுமி எமிலி மிச்சேல் தான் தன் தாய் என்பதை மீண்டும் உறுதி செய்துக் கொள்கிறாள். விவாகரத்து பெற்று வேறு மணம் முடித்து வாழும் தன் தாயையும் சந்திக்கிறாள் சிறுமி மாயா.
பிறகு அப்பாவிடம் கூறுகிறாள்" நீ என் அம்மாவின் பெயரையும் சம்மர் என்ற இன்னொரு பெண்ணின் பெயரையும் வெவ்வேறு பெயர்கள் சொல்லி அழைத்தாய். ஆனால் ஏப்ரலின் பெயரை மட்டும் மாற்றாமல் அவளுடைய உண்மையான பெயரால் அழைத்தாய். நீ ஏப்ரலை அல்லவா உண்மையாக காதலித்தாய். பின் ஏன் முடிவெடுக்க முடியாமல் தவித்தாய்?"
மூன்று பெண்களையும் காதலித்து தனிமையில் வாழும் தனது தந்தைக்காக பரிதாபப்படுகிறாள் மகள்.
இதனிடையே அப்போது தற்செயலாக ஒரு புத்தகக்கடையில் ஏப்ரலின் தந்தை கையெழுத்திட்ட ஜேன் ஆஸ்டினின் நாவல் பிரதியை வில் கண்டெடுக்கிறான்.அதை ஏப்ரலிடம் கொடுக்க செல்லும் போது அவள் வீட்டில் அந்த புதிய பாய்பிரண்ட் இருந்ததால் திரும்பி வந்துவிடுகிறான்.
அந்தப் புத்தகப் பிரதி உன்னைத் தேடி வந்து அடைந்தது ஏன் தெரியுமா என்று கேட்கிறாள் சிறுமி மாயா.போய் ஏப்ரலிடம் உன் உண்மையான காதலைக் கூறு என்றுவற்புறுத்துகிறாள். வில்லும் பாய்பிரண்டை விட்டு விலகி விட்ட ஏப்ரலை சந்திக்கிறான். ஜேன் ஆஸ்டினின் நாவல் பிரதியை அவளிடம் கொடுத்து நாம் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற அவன் ஆசையை அவள் ஏற்க மறுக்கிறாள்.நாம் நண்பர்களாகவே இருப்போம் என்கிறாள் ஏப்ரல்.
ஏப்ரலிடம்தான் வில் உண்மையான காதல் கொண்டிருந்தான். ஒரு மனிதன் தன் வாழ்வில் எத்தனையோ பேரை சந்தித்தாலும் எத்தனை பெண்களுடன் உறவு கொண்டிருந்தாலும் அவன் ஆழ்மனத்தில் ஓயாமல் சுடர்விடும் முகம் ஒன்று இருக்கும். அந்த முகம் ஏப்ரலின் முகம்தான் என்பதை மகளின் சொற்கள் மூலமாக தரிசிக்கிறான் வில்.ஏப்ரல் மீது கொண்ட காதல் அவனுக்கே தெரியாமல் இருந்தது.தனது காதலியை அவன் சம்மரிடமும் மிச்சேலிடமும் தேடிக் கொண்டிருந்தான். அது ஏமாற்றம் அளித்தது. ஏப்ரலும் அதே போல் வில்லிடம்தான் உண்மையான காதல் கொண்டிருந்தாள். அவளும் தனது காதலை யாரிடமோ தேடி ஏமாற்றம் அடைந்தாள். வில்லுடனான காதலை நட்பு என அவள் எல்லை வகுத்துக் கொண்டாள்.சுற்றுலா சென்ற இடத்தில் வேறு ஒருவனுடன் பழகி அவனுடன் சிலகாலம் வாழ்ந்து பிரிந்துவிட்டாள். அப்போதுதான் வில்லின் அருமையை அவளும் உணர்கிறாள். ஆனால் வில்லின் காதல் மீது அவளுக்கு நிச்சயமில்லை. மே பி தான். சந்தேகிக்கிறாள். "நீதான் எப்போதும் கையில் மோதிரத்துடன் ஒரு காதலியைத் தேடிக் கொண்டே இருக்கிறாயே" என்று கிண்டலடிக்கிறாள்.ஆனால் தொலைந்து போன தனது தந்தையின் அன்புப் பரிசான ஜேன் ஆஸ்டினின் நாவல் பிரதி மீண்டும் வில் மூலமே கிடைக்கும் போதுதான் அவளுக்கும் ஒரு புதிய தரிசனம் கிடைக்கிறது.வில்லின் மகள் மாயாவும் தனது தந்தையை மணமுடிக்கும் படி ஏப்ரலிடம் கெஞ்சுகிறாள். மாயாவின் களங்கமற்ற அன்பில் கரைந்துப் போகும் ஏப்ரல் அவள் சொற்களில் உள்ள நிச்சயமான அன்பை புரிந்துக் கொள்கிறாள்.
தந்தையை காதலியுடன் இணைத்து விட்டு மகள் வெளியேற காதலர்கள் இருவரும் முத்தமிடுவதுடன் படம் முடிகிறது.
மிகவும் நுட்பமான மனச்சிக்கல்களை நிச்சயமற்ற உறவுநிலைகளை நிச்சயப்படுத்த முடியாத மனங்களை மிகுந்த நேர்த்தியுடன் இப்படம் கையாள்கிறது. தமிழின் இந்த படத்தின் சாயலில் கேளடி கண்மணி என்றொரு படத்தை இயக்குனர் வஸந்த் இயக்கியிருக்கிறார். ஆனால் இந்தப் படத்தைப் பொருத்தவரை வசனங்களும் திரைக்கதையும் கூடுதல் பலம், வில்லாக நடித்துள்ள ரயன் ரெனால்டின் நடிப்பும் அபாரம். மாயாவாக வரும் சிறுமி பிரெஸ்லின் மறக்க முடியாத பாத்திரமாக மாறி விடுகிறாள்.
மூன்று காதல் கதைகளை இணைத்து பிணைத்து பாத்திரங்களில் ஏப்ரலை தனித்து இடம் பெறச் செய்கிறார் இயக்குனர். ஏப்ரலாக நடித்த இஸ்லா பிஷரும் சம்மராக நடித்த ராக்கெல் வேசும், மிச்சேலாக நடித்த எலிசபெத்தும் பேரழகிகள். மூவரையும் பார்த்து காதல் வசப்படாமல் இருக்க முடியாது.
உடல்ரீதியான ஈர்ப்புகளை மீறி உண்மையான காதலையும் கவித்துவம் மிக்க அன்பையும் அதற்கு இவ்வுலகில் நீங்காது இருக்கும் தனி மதிப்பையும் இப்படம் விளக்குகிறது. காணாமல் போன ஒரு புத்தகம் திரும்ப கிடைப்பதன் மூலம் பிரிந்துப் போன காதலர்களும் ஒன்று சேர்வதன் மூலம் இதனை இயக்குனர்  ஆடம் புரூக்ஸ் விளக்குகிறார். கிளிண்ட் மான்சலின் இசை படத்தின் மூடுக்கேற்ப மெதுவாக நம்மை வசீகரிக்கிறது. பீட்டர் டெஸ்சரின் தேர்ச்சி மிக்க எடிட்டிங்கும் பிளோரியனின் துல்லியமான கேமரா ஒளிப்பதிவும் இப்படத்தின் தரத்தை பலமடங்கு உயர்த்துகின்றன.
ஆனால் இப்படத்தின் இயக்குனரும் வசனகர்த்தாவும் திரைக்கதை எழுதியவருமான ஆடம் புரூக்ஸ்தான் எல்லோரையும் விட கவனத்தில் பதிந்துவிடுகிறார்.
மிகுந்த மனநிறைவைத் தந்த படம் இது. வாழ்க்கையில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நிச்சயமின்மை தொக்கி நிற்கும் போது நான் மே பி என அதை சந்தேகத்தால் ஒத்திவைப்பதை இனியாவது நிச்சயமாக நிராகரிக்க வேண்டும்.

நன்றி- குமுதம் தீராநதி ஜூலை 2015

Wednesday, 1 July 2015

அரிதினும் அரிது கேள் 8 என் ஆசையின் ஊஞ்சலும் நீயே அதில் ஆடிடும் கனவுகள் நீயே

அமிதாப் பச்சன் இந்தியில் நடித்துள்ள எண்ணற்ற திரைப்படங்களில் பெரிதும் பேசப்பட்ட அமர் அக்பர் ஆன்டனி, தீவார், ஷோலே, நமக் ஹராம், நாஸ்திக், குத்தார், அபிமான் போன்ற சிறந்த படங்களின் வரிசையில் முக்கியமான ஒரு படம் முக்கந்தர் கா சிக்கந்தர்.

இந்தப்படத்தின் கதை மிகவும் நீளமானது. ஆனால் சுவையானது. ஐந்து முக்கியப் பாத்திரங்கள். அருமையான பாடல்கள், நேர்த்தியான திரைக்கதை, பல இடங்களில் பரவசமூட்டும் வசனங்கள். அமிதாப் சிறுவயது முதல் ராக்கியை காதலிப்பார். ராக்கியும் அவர் அப்பாவும் அவரை புரிந்துக் கொள்ளாமல் வெறுப்பார்கள். ஆனால் அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்கு பல உதவிகள் செய்வார் அமிதாப். ராக்கியோ அமிதாப்பின் நண்பர் வினோத் கன்னாவை காதலிப்பார். இதை அறிந்ததும் உடைந்து நொறுங்கிப் போவார் அமிதாப் , அவர் மன உளைச்சலுக்கு ஆறுதலாக இருப்பவர் நடன மங்கையான ரேகா. ரேகாவின் மீது தீராத காதல் கொண்ட வில்லன் அம்ஜத்குமார் தனக்கு தடை அமிதாப் என நினைத்து அவரைக்குத்திக் கொலை செய்வார். நண்பனையும் காதலியையும் இணைத்து வைத்து அமிதாப் தியாகியாகிவிடுவார்.

அபத்தமான சினிமா கதை போலத்தான் இருக்கிறது. ஆனால் இந்தப் படம் இந்தியில் எடுக்கப்பட்ட மகத்தான காவியம்.காரணம் படத்தின் நேர்த்தியும் அமிதாப், ராக்கி, ரேகா, வினோத் கன்னா,அம்ஜத்கான் நடிப்பும் பாடல்களும்தான்.
படத்தில் எனக்குப்பிடித்த அம்சங்களை தொகுத்துத் தர முயற்சிக்கிறேன். முதன் முதலாக பால்ய கால காதல். ராக்கி சிறு பெண். தாய் இறந்துவிடுவார். காரணம் வேலைக்காரன் ஒருவன் நகைக்காக அவளை கொன்று விடுகிறான். இதனால் ராக்கியின் தந்தை ஏழை சிறுவர்களை வெறுப்பார்.ராக்கி குழந்தைத்தனமான அன்புடன் சிறுவயது அமிதாப்புடன் பழகுவாள். அமிதாப்பும் அவள் மீது உயிரை வைத்திருப்பான். அவள் ஒரு பொம்மையை பார்த்து ஆசைப்படுவாள். அந்த பொம்மையை வாங்கித்தர அமிதாப் முயற்சித்தாலும் பணம் போதாது. ஒருவழியாக பொம்மையுடன் அமிதாப் அவள் பிறந்தநாளுக்கு வரும் போது ராக்கி அவனை நினைத்து ஒ சாத்தி ரே என உருக்கமாக பாடுவாள்- குரல் ஆஷா போன்ஸ்லே, இசை கல்யாண்ஜி ஆனந்த்ஜி
அமிதாப் பொம்மையுடன் வரும் போது திருடன் என விரட்டுவார்கள். நீயும் என் அம்மாவைக் கொன்ற திருடன் போன்றவன்தானா என் முகத்திலேயே முழிக்காதே என ராக்கி விரட்டிவிடுவாள். அவள் அப்பா அவளை அழைத்து வேறு ஊருக்குப் போய்விடுவார்.

அனாதாயான சிறுவன் அமிதாப் தன் பால்ய சகியைத் தேடி மும்பைக்கு வருவான். அங்கு நிருபமா ராய் பணத்தைப் பறிக்கும் பொறுக்கிப் பயல்களுடன் சண்டைபோட்டு பணத்தை மீட்டுத் தருவான். இதனால் அவனை மகனாக பாவித்து அந்த தாய் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வாள். உன் பெயர் என்ன என்று அவர் கேட்கும்போது எனக்கு என் பெயரே தெரியாது. சிலர் பொறம்போக்கு என அழைப்பார்கள். சிலர் தேவடியா பையா என்பார்கள் சிலர் டேய் என்பார்கள்.யார் எப்படி அழைத்தாலும் என் பெயர் சொல்லி யாரும் அழைத்ததில்லை என்பான் சிறுவன்.
அவனுக்கு விஜய் என பெயரிடுகிறாள் அந்தத் தாய். அவனுக்கு ஒரு தங்கையும் கிடைக்கிறாள். தாய் இறந்த நாளில் துக்கம் தாளாமல் சுடுகாட்டில் அழும் அமிதாப்புக்கு ஒரு சூஃபீ பக்கீர்( காதர் கான்) ஆறுதல் சொல்வார். துன்பம் வரும்போது அழாதே, சிரிக்கப்பழகு. துன்பத்தைக் கண்டு சிரிப்பவன்தான் விதியை வெல்லும் வீரனாக மாறுவான்(( முக்கந்தர் கா சிக்கந்தர் ))
சிறுவன் சிரிப்பான். சிரிக்க சிரிக்க மும்பையின் நெடுஞ்சாலையில் பெரியவனாகி, அமிதாப் பச்சன் ரோத்தே ஹூவே ஆத்தே ஹை சப் என கிஷோர் குமார் குரலில் பாடிக் கொண்டே வருவார்.அழுதுக் கொண்டே பூமியில் பிறக்கிறார்கள், சிரித்துக்கொண்டே போகிறவன் எவனோ அவனே விதியை வெல்லும் வீரனாவான். என பாடலை எழுதியிருப்பவர் அன்ஜான்.
அந்தப் பாடலை பஸ் ஸ்டாண்டில் நின்று கேட்பார் ராக்கி. அதே பஸ் ஸ்டாண்டில் நிற்கும் வினோத் கன்னாவும் பாடலின் வரிகளைக் கேட்டு வியப்பார்

ஒரு சவ ஊர்வலம் அமிதாப்பின் மோட்டார் பைக்கை கடந்து செல்லும். அமிதாப் மிக ஸ்டைலாக ஒரு காலை தரையில் ஊன்றி நிற்பார். பாடல் இப்படி தொடரும்
ஜிந்தகி தோ பேவபா ஹை.....அதாவது வாழ்க்கை ஒரு துரோகி ஒருநாள் உன்னைக் கைவிட்டு விட்டு போய் விடும்
மரணம் உன் காதலியைப் போல் உன்னைத் தழுவிக் கொண்டு அழைத்துச் செல்லும்.
இறந்தபின்னும் வாழ்பவன் எவனோ அவன்தான் உலகத்திற்கு பாடமாக இருப்பான்.

இந்தப் படத்தில் ரேகாவின் கதாபாத்திரம் அற்புதமானது. ரேகா அற்புதமான நடிகையும் கூட. ஒரு கட்டத்தில் ரேகாவிடம் அமிதாப் மயங்கிக் கிடப்பதாக கருதும் நண்பர் வினோத் கன்னா உனக்கு எவ்வளவு பணம் வேண்டும் அவனை மறக்க என பேரம் பேசுவார். தொகையை உயர்த்திக் கொண்டே செல்ல அவ்வளவுதானா உங்கள் நண்பரின் விலை எனக் கேட்பார் ரேகா. அந்த விலைக்கு அவருடைய புகைப்படத்தைக் கூட நான் விற்கமாட்டேன் என்பார்.

அமிதாப் ரேகாவை காதலிக்கவில்லை என்றும் தான் காதலிக்கும் ராக்கியைத்தான் சிறுவயது முதலே காதலிக்கிறார் என்றும் அறியாதவர் வினோத் கன்னா.
ஒரு நிகழ்ச்சியில் மேடையேறும் அமிதாப் பச்சன் சிறுவயதில் ராக்கி பாடிய அதே பாடலை மேடையில் பாடுவார்
ஓ சாத்தி ரே தேரே பினாபீ க்யா ஜீனா.....குரல் கிஷோர் குமார்

இந்தப் படம் என் நினைவில் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது. இதே படத்தை தமிழில் எடுத்தார்கள். அமிதாப் வேடத்தில் சிவாஜி கணேசன். ராக்கி வேடத்தில் மாதவி.நடனக்காரி ரேகா வேடத்தில் ஸ்ரீப்ரியா, வினோத் கன்னா வேடத்தில் ஜெய்கணேஷ், படத்தின் பெயர் அமரகாவியம். இயக்குனர் அமிர்தம். தற்போது ராஜ் வீடியோ விஷனில் இதன் டிவிடி அநியாய விலைக்கு கிடைக்கிறது.



இந்தியைப் போல தமிழில் பாடல்கள் அதிகமாகப் பிரபலமாகவில்லை. பாடல்களை கண்ணதாசனும் வாலியும் எழுதினர். இசை மெல்லிசைம ன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். ஆனால் ஓ சாத்தி ரே பாடலுக்கு தமிழில் எழுதப்பட்ட பாடல் தனித்துவம் மிக்க பாடலாக அமைந்துவிட்டது. இதே பாடலை பெண் குரலில் எஸ்,பி.ஷைலஜா மிக அழகாகப் பாடியிருக்கிறார். என்றாலும் டி.எம்.எஸ் அவர்களின் கம்பீரமான குரலில் அடர்த்தியான துயரத்தைப் பிரதிபலிக்கும் ஒரு ஆழமான காதலை, அன்பை கவியரசர் கண்ணதாசன் வரிகளாக வடித்திருக்கிறார்.




செல்வமே ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
அந்தக் கோடையில் மேகம் வந்தாலும்
இளவாடையில் தென்றல் வந்தாலும்
உன்னைத்தானே நினைக்கிறேன்
என் ஆசையின் ஊஞ்சலும் நீயே
அதில் ஆடிடும் கனவுகள் நீயே
அதில்தானே வாழ்கிறேன்.

நான்பாடும் கீதம்
நீ தந்த ராகம்
நீ சொல்லும் பாடம்
என் வாழ்வில் வேதம்
நாள்தோறுமே ஆதாரமே நீயல்லவோ
நாலாயிரம் ஆராதனை நான் செய்யவோ


நீ எந்தன் வானம்
நான் அங்கு நீலம்
நீ எந்தன் வாசல்
நான் அங்கு கோலம்
பாலாறு நான்
தேனாறு நீ பூமன்றமே
காணாவிட்டால் ஆறாதம்மா என் நெஞ்சமே

இந்தப் பாடல் மனதுக்குள் அற்புதமான ரீங்காரம் செய்வதற்கு மெல்லிசை மன்னரின் தாலாட்டும் இசைதான் காரணம்
எப்போதும் பால்ய கால காதலுக்கு உள்ள துயரம் மிக்க ஒரு இனிமை இந்தப்பாடலிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
------------------------------------------------





Thursday, 18 June 2015

அரிதினும் அரிது கேள்- 7 நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா.......

நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா...... செந்தூரம் ஜெகதீஷ் ஒரு பெண்ணிடத்தில் காதலைக் கூறும் பாடல் இது. ஆண் தனது காதலை பெண்ணிடம் கூறும் போது அது கவிதையாக மலர்கிறது. கண்ணதாசன்-எஸ்.பி.பாலசுப்ரமணியம்-விஸ்வநாதன் காம்பினேஷனில் பல அற்புதமான பாடல்கள் பிறந்துள்ளன. அவர்கள் படத்தில் அங்கும் இங்கும் பாதை உண்டு, ஜூனியர் ஜூனியர் இருமனம் கொண்ட திருமண வாழ்வில், தில்லுமுல்லு படத்தில் ராகங்கள் பதினாறு, நிழல் நிஜமாகிறது படத்தில் கம்பன் ஏமாந்தான், அவள் ஒரு தொடர்கதையில் கடவுள் அமைத்து வைத்த மேடை, நினைத்தாலே இனிக்கும் படத்தில் நம்ம ஊரு சிங்காரி, காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல்மனம் நோகும் வரை, ... என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்....அதில் குறிப்பாக கே.பாலசந்தர் படங்களில் இந்த காம்பினேஷன் சிறப்பான கவனம் பெற்றது. அதே போன்று ஜேசுதாஸ்-விஸ்வநாதன்- கண்ணதாசன் காம்பினேஷனையும் சொல்லலாம், எஸ்.பி.பி. பாடிய கண்ணதாசன் பாடல்களில் மெல்லிசை மன்னர் இசையமைத்த இனிய பாடல் ஒன்று பட்டினப்பிரவேசம் படத்தில் இடம்பெற்றுள்ளது.படத்தில் இப்பாடலுக்கு நடித்தவர்கள் நடிகை லட்சுமியின் முன்னாள் கணவர் சிவச்சந்திரன், நடிகை ஸ்வர்ணா. மற்றும் ஒரு வயலின் பாலசந்தர் படங்களில் அஃறிணைகளும் பாத்திரமாக இடம்பெறுவதுண்டு. புதுப்புது அர்த்தங்களில் நடிகர்கள் டைட்டிலில் இவர்களுடன் சாலிடர் டிவி என்று குறிப்பிட்டிருப்பாா்.அவர்கள் படத்தில் அற்புதமான ஒரு பொம்மை நடித்திருக்கும். மூன்று முடிச்சு படத்தில் கடிகாரம், அரங்கேற்றம் படத்தில் கொட்டு மேளம். மனிதர்களால் வெளிப்படுத்த முடியாத சில உணர்வுகளை அஃறிணைகள் மூலமாக வெளிப்படுத்துவது பாலசந்தரின் உத்தி வயலின் வாசித்தபடி ஸ்வர்ணா தனது சோகம் தேங்கிய கண்களால் சிவாவைப் பார்க்க சிவசந்திரன் எஸ்பி.பியின் குரலில் பாடும் இந்தப் பாடல் காலம் கடந்து நிற்கும் மெல்லிசை மன்னரின் முத்துக்களில் ஒன்று வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலை தேன் நிலா எனும் நிலா என் தேவிியின் நிலா நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா மானில்லாத ஊரிலே சாயல் கண்ணிலா மீனில்லாத விண்ணிலே ஜாடை பெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா பொன்னிலா பட்டிலா புன்னகை மொட்டிலா அவள் காட்டும் அன்பிலா இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலாஎண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன் அதைச் சொல்வாய் வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா.. இந்தப் பாடல் லா லா லா லா என்ற பண்ணோடு நிலா நிலா என்றே முடியும். பார்த்தேன் ரசித்தேன் பக்கம் வரத்துடித்தேன் அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன் என தேன் தேன் எனும் முடியும் பாடலையும் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். பாடலை எஸ்.பி.பியுடன் சேர்ந்து வயலினும் பாடியுள்ளதால் இப்பாடலை சோலோ என்றும் சொல்லலாம் டூயட் என்றும் சொல்லலாம். எண்ணிலா ஆசைகள் என் நிலா கொண்டதேன் என்ற இறுதி வரி ஒரு முத்தாய்ப்பு பல்லவியும் முத்தாய்ப்பும் தான் ஒரு மகத்தான பாடலை உருவாக்குகிறது.

Sunday, 14 June 2015

அரிதினும் அரிது கேள் 6 - வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண......

அரிதினும் அரிது கேள்..6

வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண......

சிவாஜி கணசனும் சாவித்திரியும் அண்ணன் தங்கையாக பாசமலரில் நடித்து ரசிகர்களின் கைக்குட்டைகளையும் முந்தானைகளையும் ஈரம் பிழிய வைத்தவர்கள். இவர்கள் காதலர்களாகவும் கணவன் மனைவியாகவும் சில படங்களில் நடித்துள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ள அப்போதைய ரசிகர்களுக்கு இயலவில்லை போலும்.அதனால்தான் பிராப்தம் என்ற நல்ல படம் ஒன்று ரசிகர்களின் ஆதரவைப் பெற முடியாமல் போனது.
திருவருட்செல்வர் படத்தில் ஆதி சிவன் தாழ் பணிந்து நலம் பெறுவோமே எங்கள் ஆதிசக்தி நாயகியின் அருள் பெறுவோமே என்ற பாடலை அவசியம் பாருங்கள் நடிகர் திலகம், நடிகையர் திலகம் என்ற பட்டங்கள் சும்மா தரப்படவில்லை என்பது நிரூபணமாகும். இருவரும் Such a lovely pair.
பிராப்தம் இந்திப் படமான மிலனின் தமிழ் ரீமேக்.இப்படத்தை இயக்கியவரும் சாவித்திரிதான்.
இந்தியில் சுனில்தத்தும் நூதனும் நடித்த இப்படம் பல ஜென்மங்களைத் தாண்டி சேரும் காதலர்களைப் பற்றியது.தமிழில் தனுஷ் நடித்து வெளியான அனேகன் அதே போன்ற படம்தான்.
இந்தியில் எல்.வி.பிரசாத் தயாரித்த இப்படம் 1967ம் ஆண்டில் வெளியானது.சுப்பாராவ் இயக்கியது .இசை லட்சுமிகாந்த் பியாரேலால். இப்படத்தில் முகேஷ்-லதா மங்கேஷ்கர் பாடிய பாடல்கள் மிகவும் பிரபலம்.
ஹம் தும் யுக் யுக் கே ஏ கீத் மிலன்கே காத்தே ரஹேங்கே என்ற டூயட் பாடல் தமிழில் சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் என்று இடம் பெற்றது. தமிழில் பாடலாசிரியர் கவியரசு கண்ணதாசன். இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர்கள் டி.எம். எஸ். -பி.சுசிலா

பகவத் கீதை சொன்னது போல் ஆன்மா வேறு பிறவி எடுத்து வருகிறது. ஆன்மா அழிவற்றது. எனவே சொந்தம் தொடர்கதையாகிறது

சொந்தம் என்பது தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடிச் சென்று இணைக்கும்
இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம் எழுதும் புதுக்கதை இது...

விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான்காண
வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண
இளமையை நினைப்பது சுகமோ
முதுமையை ரசிப்பது சுகமோ
செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை
முந்தானை துடைப்பது சுகம்தானோ

நிலத்தில் படரும் தளிர்ப்பூங்கொடிகள்
ஆற்றில் நீந்தி வர
நீலத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி
காவியம் பாடி வர
சூரியன் ஒளியில் மின்ன
தோகையின் விழிகள் பின்ன
பொன்வண்ணக் கலசம்
பூவண்ணக் கவசம்
கண்ணோடு கலப்பது சுகம்தானோ

என்று கவித்துவ நடையுடன் மனதுக்குள் வெள்ளிய நிலவின் பன்னீரைத் தெளித்துச் செல்லும் பாடல் இது. பாடியவர்களின் குரல்கள் தித்திக்கின்றன. செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை முந்தானை கொண்டு துடைக்கும் ஒரு தம்பதியின் அந்நியோன்யமும் அன்பும் நம்மை பரவசப்படுத்துகின்றன.
இதே படத்தில் வேறு சில இனிமையான பாடல்களும் உள்ளன. இந்தியில் சாவன்கா மஹினா என முகேஷ்-லதா பாடிய பாடல் தமிழில் சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்று டி.எம்.எஸ்- சுசிலா குரலில் ஒலித்தது. இதே போல் தாலாட்டுப் பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை சின்னம்மா என்ற பாடலில் டி.எம்.எஸ் நம்மை உருக வைத்திருப்பார்
மற்றொரு மகத்தான பாடலும் இப்படத்தில் உண்டு. நேத்து பறிச்ச ரோஜா நான் பார்த்து பறிச்ச ரோஜா முள்ளில் இருந்தாலும் முகத்தில் பொலிவுண்டு...நேரம் போனால் வாசம் போகும்....வாசம் போனாலும் பாசம் போகாது என்று டி.எம்.எஸ் பாடிய மகத்தான பாடல் இது.

எந்தக் கோவில் ஆனால் என்ன தெய்வம் தெய்வம்தான்
எந்த தெய்வம் ஆனால் என்ன கோவில் கோவில் தான்

என்ற மிகப்பெரிய தரிசனத்தை வழங்கிச் செல்லும் இப்பாடலின் வரி ஒன்றை கரையினில் ஆடும் நாணலே நீ நதியிடம் சொந்தம் தேடுகிறாய் என, கே.பாலசந்தரின் அவர்கள் படத்திலும் கண்ணதாசன் பயன்படுத்தினார்.
பட்டும் பூவும் கட்டி வைத்த பச்சைக்கிளி ஒன்று
கண்ணில் வைத்து காத்திட வேண்டும் கருணை மனம் கொண்டு
என தனது காதலியை இன்னொருவருக்கு தாரை வார்க்கும் காதல் தவிப்பை கவியரசர் வடித்திருக்கிறார்.

பிராப்தம் படத்தின் சுமாரான பதிப்பு டிவிடி ஒன்று ஜிசி என்ற கம்பெனியால் வெளியிடப்பட்டுள்ளது. கருப்பு வெள்ளையில் வெளியான படம் இன்று பார்க்க முடியாததாக இருப்பினும் இதன் பாடல்கள் இன்றும் மறுஜென்மம் எடுத்துள்ளன. சாரேகாமாவிலும் யூடியூப்பிலும் இந்தப் பாடல்களைக் கேட்கலாம்.....

பாடியவர்கள் டி.எம். எஸ். -பி.சுசிலா

பகவத் கீதை சொன்னது போல் ஆன்மா வேறு பிறவி எடுத்து வருகிறது. ஆன்மா அழிவற்றது. எனவே சொந்தம் தொடர்கதையாகிறது

சொந்தம் என்பது தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடிச் சென்று இணைக்கும்
இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம் எழுதும் புதுக்கதை இது...

விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான்காண
வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண
இளமையை நினைப்பது சுகமோ
முதுமையை ரசிப்பது சுகமோ
செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை
முந்தானை துடைப்பது சுகம்தானோ

நிலத்தில் படரும் தளிர்ப்பூங்கொடிகள்
ஆற்றில் நீந்தி வர
நீலத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி
காவியம் பாடி வர
சூரியன் ஒளியில் மின்ன
தோகையின் விழிகள் பின்ன
பொன்வண்ணக் கலசம்
பூவண்ணக் கவசம்
கண்ணோடு கலப்பது சுகம்தானோ

என்று கவித்துவ நடையுடன் மனதுக்குள் வெள்ளிய நிலவின் பன்னீரைத் தெளித்துச் செல்லும் பாடல் இது. பாடியவர்களின் குரல்கள் தித்திக்கின்றன. செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை முந்தானை கொண்டு துடைக்கும் ஒரு தம்பதியின் அந்நியோன்யமும் அன்பும் நம்மை பரவசப்படுத்துகின்றன.
இதே படத்தில் வேறு சில இனிமையான பாடல்களும் உள்ளன. இந்தியில் சாவன்கா மஹினா என முகேஷ்-லதா பாடிய பாடல் தமிழில் சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்று டி.எம்.எஸ்- சுசிலா குரலில் ஒலித்தது. இதே போல் தாலாட்டுப் பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை சின்னம்மா என்ற பாடலில் டி.எம்.எஸ் நம்மை உருக வைத்திருப்பார்
மற்றொரு மகத்தான பாடலும் இப்படத்தில் உண்டு. நேத்து பறிச்ச ரோஜா நான் பார்த்து பறிச்ச ரோஜா முள்ளில் இருந்தாலும் முகத்தில் பொலிவுண்டு...நேரம் போனால் வாசம் போகும்....வாசம் போனாலும் பாசம் போகாது என்று டி.எம்.எஸ் பாடிய மகத்தான பாடல் இது.

எந்தக் கோவில் ஆனால் என்ன தெய்வம் தெய்வம்தான்
எந்த தெய்வம் ஆனால் என்ன கோவில் கோவில் தான்

என்ற மிகப்பெரிய தரிசனத்தை வழங்கிச் செல்லும் இப்பாடலின் வரி ஒன்றை கரையினில் ஆடும் நாணலே நீ நதியிடம் சொந்தம் தேடுகிறாய் என, கே.பாலசந்தரின் அவர்கள் படத்திலும் கண்ணதாசன் பயன்படுத்தினார்.
பட்டும் பூவும் கட்டி வைத்த பச்சைக்கிளி ஒன்று
கண்ணில் வைத்து காத்திட வேண்டும் கருணை மனம் கொண்டு
என தனது காதலியை இன்னொருவருக்கு தாரை வார்க்கும் காதல் தவிப்பை கவியரசர் வடித்திருக்கிறார்.

பிராப்தம் படத்தின் சுமாரான பதிப்பு ஒன்று அண்மையில் ஜிசி என்ற கம்பெனியால் வெளியிடப்பட்டுள்ளது. கருப்பு வெள்ளையில் வெளியான படம் இன்று பார்க்க முடியாததாக இருப்பினும் இதன் பாடல்கள் இன்றும் மறுஜென்மம் எடுத்துள்ளன.

Sunday, 7 June 2015

அஞ்சலி- சுந்தர சுகன்

சாதாரணமானவர்களின் சிற்றிதழ் ஆசிரியர் சுகன் 5.6.2015 அன்று தமது 50வது பிறந்தநாளின் அதிகாலை 4 மணிக்கு மறைந்தார்.
                                                                                                     
கிட்டதட்ட 20 ஆண்டுகளாக நீடித்த சுகனுடான நட்பில் பல நெகிழ்ச்சியான தருணங்களை இருவரும் கண்டிருக்கிறோம். இருவருக்குமே சிற்றிதழ் இயக்கத்தின் மீதான பற்று,திரைப்படத்தின் மீதான ஆர்வம், இலக்கிய ஆளுமைகள் மீதான மதிப்பு சம அளவில் இருந்தது. சுகன் இதழில் எனது 50க்கும் மேற்பட்ட படைப்புகளை அவர் பிரசுரித்தார். கட்டாயப்படுத்தி கொடுத்தால்தான் சந்தாவையே வாங்கிக் கொள்வார்.பணம் மீது அவருக்கு பற்று இருந்ததில்லை. கடந்த 2008ம் ஆண்டு கலைஞர் செய்திகள் சேனலில் சுகனின் வாழ்க்கை, இலக்கியம், சிற்றிதழ் ஆகியவற்றை புதையல் என்ற பெயரில் ஆவணப்படுத்தி அதன் வீடியோ பிரதியை அவரிடம் கொடுத்திருக்கிறேன்.
சுகன் எனக்கு எனது நாவலான கிடங்குத்தெருவுக்கு தஞ்சைப்ரகாஷ் இலக்கிய விருது கிடைக்க காரணமாக இருந்திருக்கிறார். 
பலமுறை என் வீட்டுக்கு வந்துள்ளார். அய்யா அய்யா என பழைமைத்தன்மை மாறாத பேச்சால் பல புதிய விஷயங்களை என்னோடு பேசுவார். இயக்குனர் கர்ணனின் கௌபாய் பாணி தமிழ்ப்படங்கள் பற்றி ஒரு பால்ய கால ஈடுபாடு அவரிடத்தில் இருந்தது எனக்கு ஆச்சரியத்தை தந்தது. எனக்கும் அது உண்டு.
சென்னை மெரீனாவில் பாரதி சிலை அருகே  7.6.2015ல் சுகனுக்கு அஞ்சலி செலுத்த சுமார் 40 நண்பர்கள் திரண்டனர். நானும் கலந்துக் கொண்டேன். தோழர் கலை மணிமுடி சுகனின் குடும்பம் அவர் சேமித்த 7 லட்சம் ரூபாயையும் கடைசியில் தமது மருத்துவ சிகிச்சைக்கு செலவழித்து குடும்பத்தை நிர்க்கதியாக விட்டுச் சென்ற தகவலை தெரிவித்தார். கடைசி காலத்தில் அவர் குடும்பம் அவருக்கு ஏற்பட்ட கட்டியை அறுவை சிகிச்சை செய்ய, அது செப்டிக் ஆகி நீரிழிவு நோய் உள்ள சுகனின் உயிரைப்பறித்த துன்பக்கதையை மு.முருகேஷ் விளக்கினார்.சிசுசல்லப்பா காலம்தொட்டே சிற்றிதழ் நடத்தியவர்களின் குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை எங்கேயாவது ஓரிடத்தில் உடைத்து தகர்க்க வேண்டும் என்று நண்பர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். சுகனின் மனைவி சகோதரி சௌந்தரவதனாவுக்கு அரசுப்பணி பெற்றுத் தருவது , சுகனின் மகன், மகள் ஆகியோரை படிக்க வைக்க கல்விச்செலவுக்கான நிதியை திரட்டுவது போன்ற திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன. எடிட்டர் லெனின் சார் 50 ஆயிரம் ரூபாய் காசோலையை கொடுத்து இந்த திட்டத்தை தொடக்கி வைத்தார்.சுமார் ஒருலட்ச ரூபாய் நிதியை திரட்ட இலக்கு வைத்துள்ளதாக மணிமுடி கூறினார்.

ஒரு லட்சம் ரூபாயால் ஒரு குடும்பம் வாழ்ந்துவிடாது என்றாலும் இந்த முயற்சி நல்ல முயற்சிதான். யாருமில்லாமல் ஒரு சிற்றிதழாளர் மறைவதில்லை. அவரது வாசகர்களும் படைப்பாளர்களும்தான் அவரது குடும்பம் என்று சுகன் மூலம் ஒரு புதிய மரபு உருவாக வேண்டும். நாளை நான் இறந்தாலும் எனக்கும் இதே கதிதான் என்பதை நாம் ஒவ்வொருவரும் எண்ணிப்பார்த்தால் நல்லது

சுகனில் எழுதுவதை பெருமையாகவே நினைத்திருக்கிறேன். இது போன்ற பத்திரிகைகளில் எழுதினால் அரைடவுசர் போட்ட படைப்பாளி என பெயர் கிடைக்கும் என கிண்டலடித்த சில ஜாம்பவான்களை நான் நிராகரித்து இருக்கிறேன். அவர்களுக்கு ஒருபோதும் ஒரு சிற்றிதழாளரின் வலியும் வரலாறும் தெரியாது. அதுவும் சுகனுக்கு அவரது குடும்பமே துணை நின்று இதழ் நடத்த உதவியிருக்கிறது. அந்த குடும்பத்திற்கு உதவும் எண்ணம் நல்ல விஷயம்தான். இந்த குடும்ப நிதி தொடர்பாக எடிட்டர் லெனின், பாவெல் , கவிஞர் இளம்பிறை கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதே பகுதியில் அதன் தொடர்பு எண்ணைத் தெரிவிக்கிறேன்.நண்பர்கள் யாவரும் இயன்றவரை உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, 3 June 2015

அரிதினும் அரிதுகேள் 5 காதலின் பொன் வீதியில்.....





காதலின் பொன் வீதியில்......
1973 ல் வெளியான பூக்காரி படத்தில் வரும் பாடல்தான் இது. மு.க.முத்து மஞ்சுளா, வெண்ணிற ஆடை நிர்மலா நடித்தது. கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய படம். பாடல் பஞ்சு அருணாச்சலம் இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். டி.எம்.எஸ், எஸ்.ஜானகி ஆகியோர் பாடியது.
காதலின் பொன் வீதியில் காதலன் பண் பாடினான்
பண்ணோடு அருகில் வந்தேன் நான்
கண்ணோடு உறவு கொண்டேன்
காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்-என்
கண்ணோடு ஒருத்தி வந்தாள்.
திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு நான் காத்திருப்பேன் உனக்காக
இனி தனிமை இல்லை பகல் இரவுமில்லை .நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக
இரு பொன் மலரில் ஒன்று என் மனதாம் தேன் கொள்ள வந்தேன் மனம் போல
என் மனதினிலே உன் நினைவுகளே, அதை அள்ளி வந்தேன் உனக்காக...
விழியோரங்களில் சில நேரங்களில் வரும் பாவங்களில் பிறப்பதுதான் கவியாகும்.
அந்தக் கவிதைகளில் உள்ள பொருள் அறிந்து அதை சுவைப்பதுதான் கலையாகும்
அந்தக் கலைகளிலும் பல புதுமையுண்டு அதைப் பழகுவதே பேரின்பம்
இந்த வாசலில் ஒரு காவலில்லை இனி காலம் எல்லாம் உன் சொந்தம்....
நடனத்தில் தேர்ச்சி பெற்ற நடிகைகளில் ஒருவரான வெண்ணிற ஆடை நிர்மலாவின் முக பாவங்களும் கை விரல் அசைவுகளும் உடல் மொழியும் பாடலை ரசிக்க வைக்கின்றன. மு.க.முத்து எம்ஜிஆரைப் போல நடை உடை பாவனைகளுடன் இருப்பார். ஆனாலும் நகல் நகல்தானே.
மு,க.முத்து நல்ல குரல் வளம் உள்ளவர்தான். நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா என்று அணையா விளக்கில் அவர் பாடிய பாடல் மிகவும் பிடித்தமான பாட்டுதான். சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க என்றும் பாடியிருப்பார். ஆனால் இந்தப்பாடலில் டி.எம்.எஸ் குரலில் மு.க.முத்து பாடியிருக்கிறார்.
டிஎம்.எஸ் எம்ஜிஆர், சிவாஜி என இருவருக்கும் மாறி மாறி குரல் கொடுத்துக் கொண்டிருந்த காலம் அது....மு.க.முத்துவுக்காக அவர் அதிகமாக குரலை மாற்றிக்கொள்ளவில்லை. எம்ஜிஆர் பாணியிலேயே பாடியிருக்கிறார். பாடலாசிரியரும் எம்ஜிஆர் பாட்டு மாதிரியே எழுதியிருப்பார். எம்.எஸ்.வியும் எம்ஜிஆர் படம் டூயட் பாடல்போலத்தான் இசையமைத்திருப்பார். மஞ்சுளா எம்ஜிஆரின் ரிக்சாக்காரன் படத்தில் அறிமுகமானவர்தான்.
இப்படத்தில் முகமுத்துவை மஞ்சுளா காதலிப்பார் ஆனால் வெண்ணிற ஆடை நிர்மலாதான் முகமுத்துவின் காதலி, இப்பாடல் மஞ்சுளா பின்னகர்ந்து போக வெண்ணிற ஆடை நிர்மலா முன்னோக்கி வர தொடங்கும்.
காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான் என்ற இனிமையான பல்லவியை பஞ்சு அருணாச்சலம் தந்திருக்கிறார். இன்றைய சினிமா பாடலாசிரியர்களுக்கு பாடலின் முதல்வரியையே படைக்கத் தெரியவில்லை. அதனால்தான் பாடல்களும் நிலைப்பதில்லை. பாடலின் முதல் வரியை அமைப்பது தனிக்கலை. கண்ணதாசனும் வாலியும் வைரமுத்துவும் அதில் தங்கள் திறமையை காட்டியுள்ளனர். மனதில் முதலில் பதிவது இந்த முதல் வரிதான். இதை ரசிகன் முணுமுணுத்தால்தான் பாடல் ஹிட்
இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை என்ற வரியும் பொருள் பொதிந்தது. இது போன்ற வரிகளை புதுக்கவிதையின் தன்மையுடன் படைத்திருப்பார்.,
இழந்த காதலின் துயரத்துடன் ( மஞ்சுளா) அடைந்த காலத்தின் மகிழ்ச்சியை(வெண்ணிற ஆடை நிர்மலா) ஒருசேர தரும் இந்தப்பாடல் துயரமான டூயட் பாடலா அல்லது மகிழ்ச்சியான டூயட் பாடலா என யோசித்துக் கொண்டிருக்கிறேன். எஸ்.ஜானகியின் ஹம்மிங்கை கேட்டுப் பார்த்து சொல்லுங்க











Tuesday, 2 June 2015

அரிதினும் அரிது கேள் 4 - உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்

உன்னை நான் பார்த்தது.......

சிவகுமார் கதாநாயகனாகவும் கமல்ஹாசன் இரண்டாம் நாயகனாகவும் நடித்த படம் பட்டிக்காட்டு ராஜா. சிவகுமாரின் முறைப்பெண் படாபட் ஜெயலட்சுமியை ஏமாற்றி விடுவார் கமல். அவர் ஸ்ரீப்ரியாவிடம் மயங்கிக் கிடப்பார். ஆனால் ஸ்ரீப்ரியா கமலை ஏமாற்றி விட்டு வசதியான இன்னொருவனுடன் சென்றுவிடுவார். கமல் மனம் திருந்தி படாபட்டை மணந்து கொள்வார். இதனிடையே முறைப்பெண்ணை மணக்க பட்டணம் வரும் சிவகுமார் அவரை கமலுடன் சேர்த்து வைத்து ஜெயசுதாவை காதலிப்பார்



இப்படத்தின் பாடல்களை வாலி எழுதியிருப்பார். இசை சங்கர்-கணேஷ்
என்னோடு வந்தான் கண்ணோடு கலந்தான், கண்ணன் யாரடி கள்வன் யாரடி பார்த்து சொல்லடி போன்ற இனிமையான பாடல்கள் இடம் பெற்றன. இதில் உன்னை நான் பார்த்தது என்று ஸ்ரீப்ரியாவுக்காக கமல் பாடும் பாடல் செம ஹிட்.
பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்


உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
நான் உனக்காகவே பாடுவேன்.
கண் உறங்காமலே வாடுவேன்

அன்று ஒருபாதி முகம்தானே கண்டேன்
இன்று மறுபாதி எதிர்பார்த்து நின்றேன்
கைவளையோசை கடல் கொஞ்சும் அலை ஓசையோ
அதை செவியார நான் கேட்க வரவில்லையோ

கம்பன் மகனாக நான் மாற வேண்டும்
கன்னித்தமிழால் உன் எழில் கூற வேண்டும்
என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி
என மடிமீது குடியேற்றி முத்தாடவோ...

எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
உன்னைத் தொடராமல் நான் இங்கு வந்தேன்
நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா
நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா


இந்தப்பாடலில் நடுவே பபப்ப்பா என எஸ்.பி.பி ஹம்மிங் கொடுப்பார் அது மிகவும் கிக்காக இப்பாடலுக்கு அழகூட்டியது. பாதி முலைகள் தெரிய தொடைக்கு மேல் கிட்ட தட்ட உள்ளாடை தெரியும் கவுன் அணிந்து ஸ்ரீப்ரியா மிகவும் இளமையாக இருப்பார். கமலும் மிகவும் ஒல்லியாக பெரிய கிருதா மீசையுடன் இருப்பார்.

இப்பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது. இப்போதும் எனக்குப் பிடித்த பாடலாக இது இருக்கிறது. அற்புதமான மெட்டு இனிய குரல் வாலியின் சுருக் சுருக் வரிகள் என பாடலில் இன்றும் ஸ்ரீபிரியாவின் மார்புகளைப் போல இளமை ததும்பி வழிகிறது.


இப்படத்தின் டிவிடி கிடைப்பதில்லை. மோசர் பேர் வெளியிட்ட மங்கலான பிரிண்ட் ஒன்று என்னிடம் உள்ளது. அதைவிட சாரிகமபா நிறுவனம் வெளியிட்ட சங்கர் கணேஷ் ஹிட்ஸ் மற்றும் எஸ்.பி.பி ஹிட்ஸ், வாலி ஹிட்ஸ் போன்றவற்றில் இப்பாடலின் இசையை ரசிக்கலாம்.

எம்பி 3 வடிவில் துல்லியமான ஆடியோவுடன் அது உள்ளது.
இப்டத்தை யாராவது மறுபதிப்பு செய்து வெளியிட்டால் பல நல்ல விஷயங்களை மீட்கலாம்
குறிப்பாக பாடல்கள்

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...