Thursday, 28 May 2015

பயணம் 1 கோயமுத்தூர்







கோவைக்கு முதன் முதலில் எனது 19வது வயதில் சென்னையிலிருந்து வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரசில் மதியம் ரயில் ஏறினேன்.அப்போது டிக்கட் விலை 30 ரூபாய்தான். கையில் 80 ரூபாய் இருந்தது. ரயிலேறிய காரணம் வீட்டை விட்டு ஓடிப்போவது. அப்பாவின் பார்ட் டைம் சம்பளம்தான் எனது கையில் இருந்த பணம். அதற்காக என் அப்பா இன்று வரை என்னை வெறுப்புடன் பார்க்கிறார். அதுபோகட்டும். பயணத்தின் நோக்கம் எனக்குள் மலர்ந்திருந்த ஒரு காதல். அதன் பின்னர் கோவைக்கு இனி போவதில்லை எனுமளவுக்கு பல குழப்பங்கள், துயரங்கள்...ஆனால் காவிரியில் குளிக்கும் போது திருச்சி நண்பன் மதன் தூண்டுதலில் மீண்டும் திருச்சியிலிருந்து கரூர் செல்லும் பஸ் ஏறினேன்.டிக்கட் விலை 2 ரூபாய்தான். அங்கிருந்து தாராபுரம் பிறகு கோவை. இதுபோல் நாலைந்து பயணங்கள், வேலைக்கான தேடல்கள், வீட்டில் அந்நியமாதல் போன்ற பல்வேறு தகிப்புகளுடன் இளமைக்காலம் வெந்து வேக, ஆறேழு ஆண்டுகளுக்குப் பின் நான் காதலி்த்த அந்தப் பெண்ணை மணம் முடித்த போது எனக்கு வயது 25. அப்போது எனது ஊதியம் 250 ரூபாய்.
கோவை எனது மாமியார் வீடு அமைந்த நகரமாகி விட்டது. மாமனார் நல்ல மனம் படைத்தவர். ஆனால் அவரால் சம்பாதிக்க முடியவில்லை. சம்பாதித்ததையெல்லாம் குடும்பத்திற்காக செலவழித்து விட்டார் .சற்று ஊதாாிதான். மகளுடைய திருமணத்திற்கு பொட்டு தங்கத்தையும் அவரால் போட முடியவில்லை. அவ்வளவு ஏன் அவர் சாவுக்கே பணம் இல்லை. கிட்டதட்ட பத்தாயிரம் ரூபாய் செலவழித்து அவருக்கு நான் சாவு எடு்த்தபோது 4 ஆயிரம் சம்பாதிக்கும் நிலையை எட்டியிருந்தேன்.

கோவையை அடுத்த பரிணாமத்தில் நான் பார்த்தது தொழில் நிமித்தமாக அங்கு அனுப்பப்பட்ட போது. ஞானியுடன் ஏற்பட்ட நட்பு, விஜயா பதிப்பகம் திரு,வேலாயுதத்தின் வாங்க என்னும் குளிர்ச்சியான அழைப்பு எழுத்தாளர்கள் சி.ஆர்.ரவீந்திரன், ஷாராஜ், வாமு கோமு, நாஞ்சில் நாடன் போன்றவர்களுடன் உருவான நட்பு, பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய கவிஞர் சிற்பி அவருடைய மாணவர்கள் என நீடித்த அந்த நட்பு வட்டத்தால் அடிக்கடி கோவை போய்க்கொண்டிருந்தேன்.
அப்போது மற்றொரு காதல் மலர்ந்தது. எனக்கும் கல்லூரி மாணவி ஒருவருக்கும் உடல் ரீதியாக மலர்ந்த நெருக்கத்தை என்ன செய்வது எனத் தெரியாமல் நாங்கள் வடவள்ளி அருகே உள்ள ஒரு கோவிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
பிரபல மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் மகன் மூலமாக அங்கு குடியிருந்த சிட்டியை  சந்தித்து நாங்கள் பேசினோம்.
பிடி தனபால் நினைவு நூலகத்தில் அவள் புத்தகம் எடுக்கப் போகும்போது நானும் போவேன். கிருஷ்ணா ஸ்வீட்சில் எங்கள் முதல் முத்தத்தை கொண்டாட பால்கோவா வாங்கி பகிர்ந்துக் கொண்டோம்.ஒரு சில நாட்களில் அந்தக் காதல் பிரிந்தது. கண்ணீருடன் பிரித்துக் கொண்டோம். குடும்பம் இடையூறாக இருந்தது. குடும்பத்தை விட்டு பிரிய அவளுக்கும் மனம் இல்லை . காதலித்து மணந்தவளை கைவிட எனக்கும் விருப்பம் இல்லை
அவள் கட்டளையை ஏற்று கோவைப்பக்கம் போவதையே நிறுத்திக் கொண்டேன். எப்போதாவது போக நேர்ந்தாலும் ஓரிரு நாட்களில் சென்னைக்கே ஓடி வந்துவிடுவேன்.வை.கி.துறையன் என்ற அற்புதமான மனிதரை சந்தித்ததுதான் கோவையில் எனக்கு மகிழ்ச்சி தந்தது.அவர் இப்போது எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை.
கடந்த 20 ஆண்டுகளில் சென்னை வாழ்க்கை பல மாற்றங்களையும் ஏற்றங்களையும் தந்தது. கோவை மெல்ல தூரமாகி சென்று விட்டது.
இந்த பழைய நினைவுகளுடன் கடந்த வாரம் கோவைக்குப் போயிருந்தேன். நாங்கள் நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடினேன். சாய்பாபா காலனியில் நண்பர் ராஜாவின் பழைய புத்தகக் கடைக்குப் போனேன். விஜயா பதிப்பகம் சென்று அங்கு வேலாயுதம் அய்யாவின் மகன் சிதம்பரத்தை சந்தித்தேன். தற்செயலாக அங்கு சி.ஆர். ரவீந்தரையும் சந்திக்க நேர்ந்தது.
கோவை பெருநகரமாக விஸ்வரூபம் எடுத்திருந்தது. நான் சினிமா பார்த்த பல தியேட்டர்களை காணவில்லை. புத்தகக் கடைகள் இருந்த போதும் எனக்குத் தேவையான புத்தகங்கள் கிடைக்கவில்லை. அல்லது புத்தகங்களுக்கான தேவை எனக்கு இல்லாமல் போய்விட்டது. ஜானி நீரோ சாகசம் புரியும் முத்துகாமிக்ஸ் மற்றும் சில மாத இதழ்களை மட்டும் விஜயா பதிப்பகத்தில் வாங்கிக் கொண்டேன்.
ரயில் நிலையம் எதிரே ஆர்.ஹெச்.ஆர் ஓட்டலில் சாப்பாடு அருமையாக இருந்தது. டூ வீலர் கிடைத்ததால் ஊரை ஒரு சுற்று சுற்றி விட்டேன். அன்று இரவே சென்னை புறப்பட்டு விட்டேன்.

ஏற்கனவே இதே போல் ஒரு அனுபவத்தை கோவைக்கு சென்று அனுபவித்ததை ஒரு கவிதையாக எழுதியிருக்கிறேன்

என்னைப் போல்
அவளும் வருவதுண்டா
அந்த இடங்களுக்கு
அந்த கணத்துக்கு?


2

கோயமுத்தூர் நகரம் எனக்கு ஏன் பிடிக்கிறது என்ற உளவியல் ரீதியான காரணங்கள் ஒருபுறமிருக்க அந்நகரில் மனிதர்களை மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் பேசும் தமிழ் அழகாக இருந்தது. பெண்கள் செழுமையாக இருந்தார்கள். பிச்சைக்காரர்கள் அதிகமில்லை. திருடர்கள் யாரையும் பார்க்கவில்லை. வீதிக்கு வீதி டாஸ்மார்க் குடிமகன்கள் இல்லை. சிலுசிலுவென குளிர்ந்த காற்று, கோடையிலும் வெக்கை இல்லை.புழுக்கம் இல்லை.உணவு ருசியாக இருந்தது. பேக்கரிகள் பளபளப்பாக இருந்தன. தேநீர் அமிர்தமாக இருந்தது. ஜவுளிக்கடைகள் பெருகியிருந்தன. ஒப்பணக்கார வீதியிலும் ஆர்.எஸ்.புரத்திலும் மக்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு உடைகளை வாங்கிச் சென்றனர். வீடுகள், குடியிருப்புகள், கடைகள்,அடுக்குமாடிகள்,வாகனங்கள் பல மடங்கு பெருகியிருந்தன. பேருந்தில் எளிதாக ஏறிச்செல்ல முடிந்தது. ரயில் நிலையம் ஊருக்குள் இருந்தது. ஆட்டோக்காரர்கள் அதிக ஆசை கொண்டவர்களாக இருப்பினும் உழைப்பாளியை மதிக்கும் மனம் காரணமாக பணம் அதிகமாக தருவது பொருட்டாக இல்லை.
கோவைக்கு போய் பத்து நாட்களாவது தங்க வேண்டும். அவளை ஒருமுறையாவது சந்தித்து பேச வேண்டும்.அருகில் உள்ள மேட்டுப்பாளையம் வனபத்திரகாளி கோவிலுக்கு செல்ல வேண்டும். ஊட்டியில் சுற்றித்திரிய வேண்டும், பழனி, உடுமலை, பொள்ளாச்சி,பாலக்காடு போன்ற ஊர்களுக்குப் போக வேண்டும். குருவாயூர் செல்ல வேண்டும், பொள்ளாச்சி நசன், ஷாராஜ் போன்ற நண்பர்களை சந்திக்க வேண்டும். ஞானி அய்யாவை ஒருமுறை சந்தித்து ஒருநாள்  முழுவதும் அவருடன் கழிக்க வேண்டும் என்றெல்லாம் பல ஆசைகள் மனதுக்குள் வட்டமடிக்கின்றன. அவை நிறைவேற விடாதபடி மனமும் பணமும் குறைவுபட்டு போக அடுத்த முறை பார்க்கலாம் என ஒத்திப் போட்டுக் கொண்டே சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறேன். அப்படித்தான் இம்முறையும் சென்னைக்குத் திரும்பினேன்.ஆனால் நினைவுகளில் ஈரம் இருந்தது. கண்ணீரின் ஈரமா காலத்தின் தூரமா எனப்புரியவில்லை












Saturday, 23 May 2015

ஹிட்ச்காக்- மரணம் எனும் மர்ம வில்லன்





 


ஆல்பிரட் ஹிட்ச்காக் 1899ம் ஆண்டி ஆகஸ்ட் 13ம் தேதி பிறந்தார்.பொதுவாக 13 என்பது மேற்கத்திய உலகினருக்கு அதிர்ஷ்டமில்லாத எண்.

ஆனால் இவருக்கு இதுவே ராசியான எண்ணாக அமைந்துவிட்டது.

பிரிட்டனில் சில மௌனப்படங்களை இயக்கிய பிறகு அவர் ஹாலிவுட்டுக்கு 
வந்தார்.1956ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர் சினிமா கலையின் புதிய 
சகாப்தத்தை உருவாக்கினார். 

ரசிகர்களை திகிலடைய வைக்கும், 
முதுகுத் தண்டைச் சில்லிட வைக்கும் திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட 
திரைக்கதைகளையே அவர் படமாக்கினார். 

ஆனாலும் காட்சி வழியே கதை 
சொல்லும் பாணியால் உலகையே வியக்க வைத்தார். தஸ்தவஸ்க்கியின் கிரைம் அன்ட் 
பனிஷ்மென்ட் எப்படி ஒரு மர்ம நாவல் போல தெரிந்தாலும் அதைக் கடந்த 
தத்துவார்த்தப் பிரச்சினைகளைப் பேசுகிறதோ அதைப் போலவே, ஹிட்ச்காக்கின் 
திரைப்படங்களும் தத்துவ சாயை கொண்டிருந்தன. 

மரணபயம், அச்சம், துரோகம் போன்ற காரணங்களால் அந்தப் படங்கள் உளவியல் மற்றும் சமூகவியல் ஆவணங்களாகவும் கருதப்பட்டன.

ஹிட்ச்காக் ஹாலிவுட்டுக்கு வந்த போது ஸ்டூடியோ முறை பிரபலமாக 
இருந்தது.தயாரிப்பு, விநியோகம், திரையிடுதல் போன்ற சகல விஷயங்களிலும் 
ஈடுபட்டு பிரம்மாண்டமான நெட்வொர்க்கை கொண்டிருந்த 5 முன்னணி 
ஸ்டூடியோக்களில் நடிகர்கள் உட்பட அனைவரும் மாதச் சம்பளத்துக்கு வேலை 
பார்த்துக் கொண்டிருந்தனர். ஸ்டூடியோ முத்திரைக்காகவே படங்கள் பாராட்டும் 
புகழும் பெற்றன.

தவறான குற்றத்தின் வலைக்குள் வந்து சிக்கிக் 
கொள்ளும் ஹிட்ச்காக்கின் கதாபாத்திரங்கள் தாஸ்தயவஸ்கியின் நாவல் 
பாத்திரங்களுக்கு நிகரான மதிப்பைப் பெற்றன.

ஆசை, பொறாமை, சந்தேகம் போன்ற குணங்களால் ஏற்படக் கூடிய வன்முறை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.உணர்ச்சியின் மிகுதியால் நிகழ்ந்துவிடும் கொலை போன்ற குற்றங்களின் மறுபக்கத்தை ஹிட்ச்காக்கின் படங்கள் ஒளியூட்டின.

இதனால்தான் தாஸ்தயவஸ்கி, காப்காவுக்கு இலக்கியத்தில் உள்ள இடம் சினிமாவில் ஹிட்ச்காக்குக்கு உண்டு என்றார் திரைப்பட மேதை ட்ரூபோ.

ஹிட்ச்காக்கை பேட்டி கண்ட அவர் அதை ஒரு புத்தகமாக்கியிருக்கிறார். 
திரைப்படத்தின் நுட்பங்களை அறிய விரும்பும் ரசிகர்களுக்கு அந்தப் படம் ஒரு 
பிரமாதமான ஆவணம். 

திரைப்படம் குறித்த ஹிட்ச்காக்கின் ஆழமான 
எண்ணங்கள் அதில் பதிவாகியுள்ளன.அவருடைய திரைக்கதை உத்திகள் ரசிகர்களுக்கு 
அதிகபட்ச திகிலையும் தவிப்பையும் ஏற்படுத்தும் நோக்கம் உடையவை. 

அழகான பெண்களை கொலை செய்வதற்கு ஏற்ற கதாபாத்திரங்கள் என்று தனது படப் பாத்திரங்களைப் பற்றி ஹிட்ச்காக் கூறுகிறார்.

ஓர் அழகான பெண் அநியாயமாக கொலை செய்யப்படும் போது ஏற்படும் அனுதாபம் 
மொத்தமும் அவளுக்கு கிடைத்துவிடும் என்ற அவரது கணிப்பு சரியானதுதான். 

சைக்கோ படத்தில் கதாநாயகி ஷவரில் குளி்க்கும்போது கொலை செய்யப்படும் அந்த 
பிரசித்திப் பெற்ற காட்சி சினிமா ரசிகர்களால் மிகவும் சிலாகிக்கப்படுகிறது.

அழகான கழுத்து வெட்டுவதற்கு ஆசையைத் தூண்டுவது என்ற விதமாக படுகொலை 
படங்களின் தந்தையான ஹிட்ச்காக் கூறுவார் என்றாலும் அவர் உண்மையில் 
போலீஸ்காரர்களைப் பார்த்தால் பயந்த சுபாவம் உடையவராகவே இருந்தார்.

ஒரு படத்தின் வில்லன் எவ்வளவு வெற்றிகரமாக செயல்படுகிறானோ அந்த அளவுக்கு படம் வெற்றி பெரும் என்பது அவர் கணிப்பு. 

மிகச் சாதாரணமான பின்புலங்களில் மிக அதீதமான நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக காட்டுவது அவருக்குப் பிடித்தமானது. 

இருள் கொண்ட திகிலான ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ஒரு கொலை நடப்பதைக் 
காட்டுவதை விட மக்கள் புழுங்கும் இடத்தில், கூட்டத்தின் இடையே வில்லன் 
புகுந்து கொலை செய்து தப்பிச் செல்வது பரபரப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு 
அறிந்த ஹிட்ச்காக் இந்த உத்தியையே பின்பற்றினார். 

தி மேன் ஹூ நியு டூமச் படத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் கொலை நடக்கும் போது ஏற்பட்ட பரபரப்பை நினைத்துப் பாருங்கள். 

ரசிகர்களை அது அந்தளவுக்கு திடுக்கிட வைத்தது.

தனக்கு வலுவான விஷூவல் மைன்ட் இருப்பதாக ஹிட்ச்காக் ஒருமுறை கூறினார். 

படத்தின் திரைக்கதை தயாரானதும் அதை முழுவதுமாக காட்சி வடிவில் கற்பனை செய்துக் கொள்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு அந்த திரைக்கதையை புரட்டிக் கூடப் பார்க்க மாட்டாராம். அதை தன்
உள்ளத்தால் அணு அணுவாக அறிந்து வைத்திருப்பதாக அவர் கூறுவார்.

ஹிட்ச்காக் படங்களில் பெண்களுடனான மனித உறவுகளுக்கு கூடுதல் அழுத்தம் தரப்பட்டிருந்தது.

குறிப்பாக தாயுடன் மனிதன் கொள்ளும் உறவு அவருடைய படங்களில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றது.

நடிகர்களை மந்தையைப் போல் நடத்தியவர் என்று ஹிட்ச்காக் மீது புகார் உண்டு.

ஆனால் நடிப்புக்கு என வந்துவிட்ட பிறகு அவர்கள் திரைக்கதைக்கு நியாயம் 
செய்ய வேண்டும் என்றும் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் 
வலியுறுத்தியவர் ஹிட்ச்காக்.

60 ஆண்டு திரையுலக வாழ்வில் 53 படங்களை இயக்கியவர் ஹிட்ச்காக்.

Rear Window, A Man who knew too much, 39 Steps, Psycho, Vertigo, Rebecca போன்ற படங்கள் அவருடைய சாதனைகளாக கருதப்படுகின்றன.

அகடமி விருதுகள் அவருக்கு பலமுறை நிராகரிக்கப்பட்ட போதும் ஸ்பெல் பவுண்ட் என்ற படத்தின் இசைக்கு அகடமி விருது கிடைத்தது.

கலிபோர்னியாவில் தமது இறுதிக்காலத்தைக் கழித்த அவர் 80 வது வயதில் 1960ம் ஆண்டில் காலமானார். 

எந்த வித திடுக்கிட வைக்கும் மர்மம் இல்லாமல் இயற்கையாகவே அவர் உயிர் பிரிந்தது. 

ஆனாலும் மரணமும் எப்போது வரும் என்று தெரியாத ஒரு மர்ம வில்லன்தானே.

Friday, 15 May 2015

அரிதினும் அரிது கேள் 2 - இளம் பனித்துளி விழும் நேரம்

சில பாடல்களுக்கு கேட்டவுடன் தீயைப் போல் பற்றிக் கொள்ளும் தன்மை உண்டு. இந்தப்பாட்டும் அப்படிப்பட்டது. ராஜ் வீடியோ விஷனின் மேடை நிகழ்ச்சி டிவிடி போட்டு பார்த்துக் கொண்டிருந்த போது மாற்றுத்திறனாளி் பெண் ஒருவர் மேடையில் இளம் பனித்துளி விழும் நேரம் பாட்டை பாடிய போது எனது நினைவுகள் பின்னோக்கிப் பாய்ந்துசென்றன. எனது இளம் பருவத்தில் கனவுகளுடன் திரிந்த காலங்கள் கண் முன்னே வந்தன.( இப்போதும் கனவுகளுடன்தான் திரிகிறேன். ஆனால் வேறுவிதமான கனவுகள்)
சுமலதா சுமன் நடித்த ஆராதனை என்ற படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை தேட ஆரம்பித்தேன். அப்போதே என்னை அலைக்கழித்திருந்த அந்தப்பாடலை நினைவுபடுத்திய அந்த பெண்ணுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்துக் கொண்டு அந்தப்பாடலை தேட ஆரம்பித்தேன். எங்கும் இல்லை. இளையராஜா ஹிட்ஸ் தொகுப்புகளில் மீண்டும் மீண்டும் 50 படங்களுக்குட்பட்ட பாடல்களே இடம் பெறுகின்றன. சின்னதம்பி, மௌனராகம், பொன்னுமணி, எஜமான்,குணா என எனக்குப் பிடித்த பாடல்களும் படங்களும் இருப்பினும் இதுபோன்ற அரிய பாடல்களை கேட்கவே முடிவதில்லை. வானொலியும் தொலைக்காட்சி சேனல்களும் போட்ட பாடல்களையே மறுமறுபடியும் போட்டு இவ்வளவு தான் தமிழ்ச்சினிமா பாடல்கள் என்ற மாயையை ஏற்படுத்துகின்றன. சொந்தமாக ஒருகலெக்சன் வைத்திருக்காவிட்டால் ஏமாறப் போவது திண்ணம் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே நான் தெரிந்துக் கொண்டு பாடல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். ஆராதனை படத்தையும் பாட்டையும் தேடிக் கொண்டிருந்த போது எனக்காகவே அப்படத்தின் டிவிடி வெளியாகியது. அந்தப் பாடல் மெருகு குலையாமல் அப்படியே படத்தில் இருக்கிறது.
இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய இளம் பனித்துளி விழும் நேரம் அத்தகைய அருமையான பாடல், ராதிகா என்பவர் பாடியது. அந்த ராதிகாவைப் பற்றிய விவரங்களை தேடுகிறேன்.கிடைத்ததும் இங்கு பதிவு செய்கிறேன்.







.
காதலனிடம் எண்ணத்தை சொல்லத்துடிக்கும் காதலி அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் தனது ஆசையை பாட்டாக வடிக்கிறாள். படத்தில் சுமனும் சுமலதாவும்தான் அந்த காதலர்கள்.

இளம் பனித்துளி விழும் நேரம்
லலலல லலலல லாலா
இலைகளில் மகரந்தக் கோலம்
துணைக்கிளி ஒன்று தவித்தபடி
தனிக்கிளி ஒன்று துடித்தபடி
சுடச்சுட நனைகின்றதே….
லலலலலலாலா….
ஆ….ஆசை நதி மடை திறந்து
ஆ…வாசல் வந்து கதவடைக்கும்
காயாது மன ஈரங்கள்
தாளாது சுடுபாரங்கள்
காவிய காதலின் தேசங்களே
ஊமையின் காதலைப் பாடுங்களேன்
மலர்களும் நனைகின்றதே…
லலலா இளம் பனித்துளி விழும் நேரம்…..

ஆ…பாவை விழித்துளி விழுந்து
ஆ…பூவின் பனித்துளி நனையும்
தீயாகும் ஒரு தேன் சோலை
போராடும் ஒரு பூமாலை
சூரியகாந்திகள் ஆடியதோ
சூரியனை அவை மூடியதோ
முகில் வந்து முகம் தொட்டதோ….
லலலா லா…..

புதுக்கவிதையின் ஈரமும் வாசமும் கொண்டு எழுதப்பட்ட பாடல் இது…வழக்கமான மரபுக்கவிதைகளை மீறி இசைஞானியின் வயலின்களுடன் இழைந்து எழுதப்பட்ட சொற்கள்…
மனதுக்குள் ஒரு பனித்துளியைப் போல் இப்பாடல் மென்மையாக விழுகிறது.

பின்குறிப்பு

மலையாளப் பின்னணி பாடகியான ராதிகா திலக் என்பவர்தான் இந்தப்பாடலை பாடியவர். அவர் புற்றுநோயால் கடந்த 20-9-2015 அன்று கொச்சியில் காலமானார். ராதிகாவின் குரல் என் நினைவில் என்றும் பதிந்து கிடக்கும்






Wednesday, 13 May 2015

அரிதினும் அரிது கேள் 1- நீ வருவாய் என நானிருந்தேன்

சில பாடல்கள் மனத்தின் ஆழத்திற்குள் இழந்த<காதலைப் போல பதிவாகி விடுகின்றன அந்தப் பாடல்களுக்கும் நமது வாழ்ககைக்கும் சம்பந்தம் இருக்கலாம் ஆனால் சம்பந்தமே இல்லாத சில பாடல்களும் அவ்வாறு நிலைப்பதுண்டு. திரைவரலாற்றில் எனக்கு நினைவு தெரிந்து சுமார் 50 60 ஆண்டுகால பாடல்களை அறிவேன் பாகவதர் கிட்டப்பா சின்னப்பா >காலம் தொட்டு இன்றைய பாடல்கள் வரை அனேகமாக எந்தப் பாடல் எந்தப் படம் என்று துல்லியமாகக் கூறும் அறிவை கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பயிற்சியினால் பெற்றுள்ளேன். இதில் ஏராளமான பாடல்கள் மறைந்துவிட்டன. அவை கிடைப்பதே அரிதாக உள்ளன. தேடித் தேடி அலைந்ததில் ஆடியோ வீடியோ என்று பல அரிய பாடல்களைத் தேடி வைத்திருக்கிறேன். இப்போது யூ டியூப்பில் இவை கிடைப்பதும் நிம்மதி .ஆனால் யூடியூப்பில் பாடல் படம் பார்க்கிற ஆள் அல்ல நான். எனக்குப் பாட்டு என்றால் சத்தமாக இசை அதிர அதன் ஒவ்வொரு வயலினும் ஒவ்வொரு மூச்சும் உச்சரிப்பும் கேட்க வேண்டும்.சுஜாதா படத்தில் இடம் பெற்ற பாடல் நீ வருவாய் என ...கல்யாணி மேனன் பாடி எம்.எஸ்.வி இசையமைத்த கண்ணதாசனின் பாடல் இது. நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன் அடி தேவி உந்தன் தோழி ஒரு தூதானாள் இன்று இரவெங்கே நிலவெங்கே உன்னை காண்பேனோ என்றும் சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்துக் கொண்டு விரிந்த புருவங்களில் அழகை சுமந்துக் கொண்ட தனிமை மயக்கம்தனை தணிப்பதற்கு வாராயோ ஒருமேடை ஒரு தோகை அது ஆடாதோ கண்ணே குழல் மேகம் தரும் ராகம் அது நாடாதோ என்னை இந்தப்படம் வெளியான போது தேவி திரையரங்கில் போய் பார்த்தேன். முதல் பாட்டே நீவருவாய்...... படம் தொடங்கி சிறிது நேரத்தில் இந்தப் பாடல் ஏற்படுத்திய மயக்கம் இன்று வரை கலையவில்லை. மெல்லிசை மன்னரின் புத்தம் புதிய இசை வடிவில் இப்பாடல் மனதை வாட்டியது. கல்யாணி மேனனின் குரலும்இக்காட்சியில் நடித்த ராஜலட்சுமியின் மாசு மருவற்ற பேரழகும், சரிதாவின் உதட்டுச் சுழிப்புடன் கூடிய எள்ளல் புன்னகையும் பாடலுடன் காட்சியையும் மறக்க முடியாததாக்கி விட்டன. இப்பாடலை படத்தில் எழுதியவரான கவிஞர் வேடம் கொண்ட நடிகர் சங்கர்( ஒருதலைராகம்) குளித்துவிட்டு பாத்ரூமிலிருந்து டவலும் பனியனுமாக வந்து இப்பாடலை மூடிய அறையிலிருந்து வெளியே நின்று கேட்பதாக காட்சி. தமது காதலிக்காக தாம் எழுதிய பாடலை தமது காதலியே தமது சகோதரியிடம் பாடிக் காட்டுவதை மெய்மறந்து ரசிப்பார் கவித்துவம் பாடலில் இருந்து காட்சி வரை பாய்ந்தது

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...